----------------
அமானுஷ்யங்களும் சூட்சும சக்திகளும் நம்முன் அவ்வப்போது விளையாட்டு காட்டுவது வழக்கம்.அவற்றின் சுவாரஸ்யத்திற்காக உற்று பார்த்து விட்டு நகர்ந்து விடுவேன்.பொதுவாக சிவப்பு நிறத்தில் இருக்கும் இருபது ரூபாய் நோட்டுக்களை செலவழிக்காமல் சேமித்து வைப்பதுண்டு.இதற்கு ஒரு சூட்சுமக்காரணம் உள்ளது.அப்புறம் சொல்கிறேன்.இன்று சில்லரை இல்லாததால் இரண்டு இருபது ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டு மோர் வாங்குவதற்காக (இஸ்கானில் மோர் பால் எல்லாம் விற்பார்கள்) சென்றபோது அவர்கள் விற்பனையை முடித்து ஹாஸ்டலுக்கு மீதமுள்ளவற்றை எடுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.அவர்களிடம் போய் மோர் கேட்டு வாங்கிக் கொண்டு அந்த இரண்டு இருபது ரூபாய் நோட்டுக்களை மோர் விற்ற சிறுவனிடம் கைகளை உயர்த்தி நீட்டினேன்.
நாங்கள் நின்றிருந்த இடம் ஒரு காட்டுக்கோவிலும் அதில் ஒரு உயர்ந்த சூலமும் உள்ள இடம்.
என் பின்னால் வந்த மூன்று நாட்டு நாய்கள் ஒரே தாவலாகத் தாவி அந்த இரண்டு இருபது ரூபாய் நோட்டுக்களை கவ்வ முயன்றன.மெல்ல திரும்பி அந்த பைரவர்களைப் பார்த்துப் புன்னகைத்தேன்.
அவை உடனே சிரித்தவாறு மண்டியிட்டு அமர்ந்து கொண்டு என்னை உற்றுப் பார்க்க ஆரம்பித்தன.
மோர்காரப் பையனிடம் பணத்தை கொடுத்து விட்டு மீதம் நான்கு ரூபாய் வாங்க காத்திருந்தேன்.
வந்தது இரண்டு இரண்டு ரூபாய் நாணயங்கள்.அதாவது நான்கு ரூபாய்.
அதுவரை அந்த மூன்று பைரவர்களும் பொறுமையாக மண்டியிட்டு என் முன்னால் அமர்ந்திருந்தன.
இதில் உள்ள சூட்சுமம் புரிந்தது.
சுக்கிரவார பிரதோஷ தினத்தன்று சில முக்கியமான தகவல்களை எனக்குப் புரிகிற மாதிரி உணர்த்திய பிரபஞ்சத்திற்கு நன்றி.
இந்த நாள் வளமான நாளாகியது.
----------------
ConversionConversion EmoticonEmoticon